ஓசூர் வனச்சரகம் கும்பளம் காப்புக்காட்டில்  கர்நாடக யானைகள் முகாமிட்டுள்ள தகவலை வனம் சார்ந்த கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர். 
தமிழகம்

கர்நாடகாவில் இருந்து வந்து ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள 13 யானைகள்: 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு

ஜோதி ரவிசுகுமார்

கர்நாடகாவிலிருந்து ஓசூர் வனச்சரகம் வந்து முகாமிட்டுள்ள 4 குட்டி யானைகள் உட்பட 13 யானைகளையும் கண்காணித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாவட்ட வனத்துறை சார்பில் 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வனத்தை ஒட்டியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் யானைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக வனத்திலிருந்து வெளியேறிய 4 குட்டி யானைகள் மற்றும் 9 பெரிய யானைகள் என மொத்தம் 13 யானைகளும் தமிழக எல்லையான பேரிகை அருகே கரியணப்பள்ளி மற்றும் காருபெல்லா கிராமங்களைக் கடந்து கும்பளம் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள ஓசூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களும், விவசாயிகளும், இந்த யானைகளின் கூட்டத்தை மீண்டும் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே மாவட்ட வனத்துறை சார்பில் இந்த 13 யானைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் யானைகளின் வருகை குறித்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது, ''மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரகம் கும்பளம் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள 4 குட்டி யானைகள் உட்பட 13 யானைகளின் கண்காணிப்புப் பணிக்காக தலா 6 பேர் கொண்ட 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட வனத்துறை சார்பில் ஓசூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள காருபெல்லா, சின்னதின்னூர், திராடி, திம்மராயன்கொட்டாய், கோயில்பள்ளி, பெப்பாலப்பள்ளி, ஆலுசோனை, கடத்தூர், சின்னகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, கமலகானகொத்தூர், பெரியகுத்தி, அலேகிருஷ்ணாபுரம், அலேலிங்காபுரம், கே.என்.போடூர், அலேகுந்தாணி, தரணிசந்திரம், கரியாணப்பள்ளி, நல்லூர், காந்திநகர், பீமகானப்பள்ளி உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

ஒலிப்பெருக்கியில், கர்நாடகாவில் இருந்து யானைகள் வந்துள்ளன. இரவு நேரங்களில் யாரும் காவலுக்கோ, பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ செல்ல வேண்டாம். செம்மறியாடு, மாடுகளைக் காட்டுக்கு ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானைகள் தென்பட்டால் வனத்துறையின் கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது'' என்று வனச்சரகர் ரவி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT