தமிழகம்

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே எந்தவித குழப்பமும் இல்லை: நமச்சிவாயம் பேட்டி

அ.முன்னடியான்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே எந்தவித குழப்பமும் இல்லை என்று பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட குமாரப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று (ஜூன் 2) நடைபெற்றது.

இம்முகாமை புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘கரோனா தடுப்பூசி முகாம் மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன் மூலம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கும். எனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

கரோனாவின் மூன்றாவது அலை வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் தேதி கொடுப்பது வழக்கம்.

அதில் எங்கள் இயக்கத்துக்கும் உடன்பாடு உண்டு. அதனால் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அமைச்சரவை பங்கீடு குறித்து முதல்வருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதல்வர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம். பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இடையே எந்தவித குழப்பமும் இல்லை, சுமுகமான தீர்வு எட்டப்படும். அமைச்சரவையில் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.’’இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT