அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 02) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொறியியல் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது, மறுதேர்வுகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நவம்பர் / டிசம்பரில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு மே 23ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இணையத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், முன்மாதிரி பதிவு பக்கங்களில் (Registration preview page) குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி பெறாத (Arrear) பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வாணையத்தைத் தொடர்புகொள்ளும் வகையில், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அஞ்சல் வழியில் கடிதம் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்மாதிரி பதிவுப் பக்கத்தில் காட்டப்படும் தேர்ச்சி பெறாத பாடங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதனைக் குறிப்புகளுக்கான இடத்தில் (Remarks column) தெரிவிக்கவும், அதனையே கட்டாயமாக அலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கவும் வழிமுறையாகக் கூறப்பட்டுள்ளது.
கரோனா பொது ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அஞ்சலகங்களை அணுகுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தற்போதைய சூழலில் அது பாதுகாப்பான வழிமுறையும் இல்லை. மேலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் மற்றும் விளக்கங்களை உடனடியாகப் பெற முடியாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
ஆகவே, அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மேலும் ஒருவார காலம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையை வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.