தமிழகம்

திண்டிவனம் நீதிமன்றத்தில் அன்புமணி மீதான வழக்கை விசாரிக்க தடை

செய்திப்பிரிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் மீது திண்டிவனம் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அன்புமணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தப்படும். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த விழாவின்போது, மரக்காணத்தில் இரு வகுப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து பாமக தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

இதைக் கண்டித்து கட்சியின் இளைஞரணி தலைவர் என்ற முறையில் சென்னையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தேன். அந்த பேட்டி, இரு வகுப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி, என் மீது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டிவனம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு வரும் 11-ம் தேதி நான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகாரில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் கிடையாது. எனது பேட்டியால் எந்த மோதலும் நடைபெறவில்லை.

இதுபோன்ற மற்றொரு வழக்கை என் மீது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே, பிரம்மதேசம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, ‘‘மனுதாரருக்கு எதிராக திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவர் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT