குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய நவீன சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, நவீன முறையில் சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவுக்கு இணங்க குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த 100 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் செறிவூட்டி வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இதைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஜான் லூயிஸ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் குருநாதன், குரோம்பேட்டை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் எடுத்துக் கூறினோம். அப்போது, `ஒரு வார காலத்தில் முடிவு செய்கிறோம்' என்று கூறி அனுப்பி வைத்தனர்.
மத்திய அரசின் கரோனா தடுப்பூசி கொள்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கேட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால், தமிழக அரசு கரோனா தடுப்பூசி ஆலையை நடத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசு மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மெத்தனமாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.