தமிழகம்

இயற்கைச் சீற்ற விளைவுகளுக்குத் தயார் நிலையில் இல்லாத மருத்துவமனைகள்

வித்யா கிருஷ்ணன்

சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இயற்கை பேரிடர் விளைவுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவில்லை. வெள்ள நீர் அதிகரிக்க அதிகரிக்க நவீன வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு அமைப்பும் தோல்வியடைந்தன.

வீடுகள் நாசமாயின, சாலைகளில் பெரும்பள்ளங்கள், தொடர்பு சாதன வலைப்பின்னல்கள் முழுதும் பழுதடைந்து விட்டன. கழிவு நீர் வெளியேற்ற குழாய்கள் சேதமடைந்தன, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறைந்தது 13 ஆரம்ப சுகாதார மையங்கள் பாதிக்கப்பட்டன. குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுக்கா மருத்துவமனை தனது புற நோயாளிகளை திருமண மண்டபத்தில் வைத்து சிகிச்சை அளித்தது. மேலும் உள் நோயாளிகள் பலர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

கேகே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தரைத்தளத்தில் மழை நீர் புகுந்தது. நோயாளிகள் மேல் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் ஆதரவில் இருந்த 18 நோயாளிகள் டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் இறந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மழை, வெள்ளம் கற்றுக் கொடுத்த பாடம் என்னவெனில் பாதுகாப்பு தர நடைமுறைகளை மருத்துவமனைகள் இன்னும் கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டியதையே.

மருத்துவமனைகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து கடைசியாக 2011-ம் ஆண்டு கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனை தீப்பிடித்த சம்பவத்தின் போது விவாதிக்கப்பட்டது. டிசம்பர் 2011-ல் இந்த மருத்துவமனையில் அடித்தளத்தில் தீ மூண்டது. காலையில் 90 நோயாளிகள் பலியாகினர்.

இதனையடுத்து பெரிய விபத்துகள், பேரிடர்கள் நிகழும்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கொள்கை ஆவணம் ஒன்றைத் தயாரித்தனர். இந்த 111 பக்க ஆவணம் அவசரநிலை காலத்தில் டாக்டர்கள் நர்சுகள், நிர்வாகம் எப்படி செயல்படவேண்டும் என்பதை நுணுக்கமாக விவரித்திருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் வெள்ள நீர் புகாமல் தடுப்பது எப்படி என்பதையும் இந்த ஆவணம் விவரித்திருந்தது. தீபிடித்தால் என்ன செய்வது உள்ளிட்ட பல பாதுகாப்பு நடைமுறைகளை இந்த ஆவணம் அறிவுறித்தியிருந்தது.

ஆனால் டிசம்பர் 2013-க்குப் பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இந்த ஆவணம் கையளிக்கப்பட்ட பிறகு கிடப்பில் போடப்பட்டது.

மருத்துவமனைகள் பாதுகாப்பு பற்றி தமிழகத்தில் சட்டம் உள்ளது. இதனைக் கொண்டு தனியார் மருத்துவமனைகளை ஒழுங்கு படுத்த முடியும். ஆனால் இது நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.

காரணம்: தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டம், 1997 -ல், 18 ஆண்டுகளாக தமிழகம் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. 1997 ஏப்ரலில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநில அரசுக்கு 3 தெரிவுகள் உள்ளன: ஒன்று மத்திய சட்டத்தை தழுவ வேண்டும், அல்லது தனது சட்டத்தை செயல்படுத்த வேண்டும், அல்லது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தமிழகம் இதில் எதையுமே செய்யவில்லை.

இந்த தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் வரையறை செய்யப்பட்ட போது ஆலோசகராக இருந்த சுனில் நட்ராஜ் இது பற்றி கூறும்போது, “தமிழகத்திலிருந்துதான் மத்திய சட்டம் பற்றிய கருத்தை நாங்கள் வந்தடைந்தோம். மத்திய அரசும் இந்தச் சட்டத்தை அமல் படுத்தினால் மாநில அரசும் இதனை செயல்படுத்த நிர்பந்தப்படும் என்று நினைத்தோம். தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் ‘லாபி’ மிகவும் வலுவாக உள்ளதால் 20 ஆண்டுகளாக இதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

சுகாதாரச் செய்லர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறும்போது, சட்டத்துக்கான விதிமுறைகளை வடிவமைப்பதில் இறுதி கட்டத்தில் உள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளோம். விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே நோயாளிகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை குடிமக்கள் இனி கேட்கத் தயாராக வேண்டும். மக்கள் மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து உறுதி செய்து கொள்ள விழிப்புணர்வு பெற வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுதுமே இன்றைய இருண்ட நிலையே தொடரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT