தமிழகம்

திருநாகேஸ்வரத்தில் ஜூன் 21-ல் ராகு பெயர்ச்சி விழா

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ராகு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தை அடுத்து உள்ளது திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில். இது ராகுபகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலம். நாக அரசராகிய ராகு பூஜித்த காரணத்தால்தான் இத்தலத்துக்கு திருநாகேஸ்வரம் என்கிற பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் அருள் மிகு நாகநாதசுவாமி, அருள்மிகு பிறையணி அம்மன், அருள்மிகு கிரிகுஜாம்பிகை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில்  ராகு பகவான் நாகவள்ளி, நாகக்கன்னி என இருதேவியருடன் எழுந்தளியுள்ளார். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் ராகுபகவான்  நாகநாதசுவாமியை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் தன்னை வழிபடுவோர்க்கு பல நன்மை களையும் அளிக்க வல்ல அருளும், வரமும் பெற்று ராகு பகவான் திகழ் கிறார். இத்தலத்தில் ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பு.

ராகுவின் பெருமை

சந்திர சூரியரையும் பலம் இழக்கச் செய்து, கட்டுப்படுத்தும் ஆற்றல் நவக்கிரகங்களில் ராகு - கேதுவுக்கு உண்டு. ராகுவுக்கு எந்த வீடும் சொந்தமில்லை. ராகு எந்த ராசியில் இருக்கிறாரோ, எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறாரோ, எந்த இடத்தில் சேர்கிறாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாகத் தரும் யோகக்காரராக ராகு திகழ்வார். ராகு ஒருவனைக் குபேரபுரிக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆனால், ராகு தோஷம் உடையவருக்கு பாதகமான பலன்களே விளையும்.

களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்குவதற்கு ராகுவை வழிபட வேண்டும். திருநாகேஸ்வரத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு பின்னர் ராகுவை வழிபட்டு தோஷ பரிகாரங்களைச் செய்து ராகுவின் அருளைப் பெறலாம்.

ராகுபெயர்ச்சி விழா

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ராகுபகவான் ஜூன் 21-ம் தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.12 மணிக்கு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு பெயர்ச்சி விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

இந்த பெயர்ச்சியையொட்டி ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நலம் பயக்கும். இதையொட்டி ராகு பகவானுக்கு 16.6.2014 முதல் 19.6.2014 வரையிலும், 23.6.2014 முதல் 24.6.2014 வரையிலும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

யாகசாலை தொடக்கம்

ஜூன் 19-ம் தேதி மாலை 6.00 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் கால யாக பூஜை தொடங்கும். 20-ம் தேதி காலை இரண்டாம் காலமும், அன்றைய தினம் மாலை மூன்றாம் காலமும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஜூன் 21-ம் தேதி காலை 8.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகளின் பின் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள் தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தோஷ பரிகாரம் செய்ய வேண்டி யவர்கள் ரூ.200-ஐ நேரிலோ, பணவிடை அல்லது வரைவோலை மூலமாகவோ - ’செயல் அலுவலர், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்- 612204’ என்ற திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி பங்கேற்கலாம். பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ஜெ.பரணிதரன், தக்கார் சி.மாரியப் பன், உபயதாரர்கள் மற்றும் திருக்கோ யில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

சாபம் நீங்கப் பெற்ற ராகு

சுசீல முனிவரின் குழந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவுக்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற நான்கு தலங்களில் வழிபட்டு நிறைவில் திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு நாகநாதசுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட்டு ராகு சாபம் நீங்கப் பெற்றார். என் அருள் பெற்ற நீ என்னை வழிபட்டு பிறகு உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்ப தோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவை களை நீக்கி அருள்பாலிக்க வேண்டும் என ராகுவை பணித்தார்.

SCROLL FOR NEXT