தேனியில் கரோனாவால் இறந்தவர்களின் உடலை பேக் செய்வதற்கான கிட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உடலை அடையாளம் காண்பதில் உறவினர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு உள்ளது. இங்கு தினமும் 15-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து வருகின்றனர்.
தேனி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உடல்கள். இந்த உடல்கள் மருத்துவமனை பிணவறையில் சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி பேக்கிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பேக்கிங் கிட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடல்கள் பிளாஸ்டிக்கில் முழுமையாக பேக்கிங் செய்து பிணவறையில் வைக்கப்படுகிறது. இறந்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் இருப்பதால் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் கூறியதாவது:
பிணவறையில் ஒவ்வொரு உடலின் முகத்தை திறந்து பார்த்து பின்னர் எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. இதனால் எங்களுக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது உடல்களை அடையாளப்படுத்தவும், பணியாளரே இவற்றை எடுத்துக் கொடுக்கவும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறுகையில், இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.