திருச்செந்தூரில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை இசைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
தமிழகம்

கரோனா ஊரடங்கால் திருச்செந்தூரில் தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் திருச்செந்தூரில் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

சுவாமி முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். திருவிழா நாட்கள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.

திருச்செந்தூர் கோயிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் உள்ளனர். இங்கு நடைபெறும் திருமண நிகழ்வுகள், பால் குடம் எடுக்கும் விழா போன்றவற்றின் மூலம் இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா தொற்றின் முதல் அலையின்போது வருமானம் இன்றி சிரமப்பட்டனர். இந்த ஆண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு ரூ.5,000 கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என, திருச்செந்தூர் வட்டார அனைத்து இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழுத்தை இறுக்கும் பிரச்சினைகள்

இதுகுறித்து திருச்செந்தூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் வேம்புராஜ் கூறும்போது, “ திருச்செந்தூரில் 53 பேர் இசை தொழில் செய்துவருகிறோம். எங்களை நம்பிநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பங்குனி, சித்திரை,வைகாசி மாதங்களில் திருமண முகூர்த்த காலங்களில் முழுவதுமாக தொழில் இருக்கும். தொடர்ந்து ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசிமாதங்களில் அவ்வப்போது நடைபெறும் திருமண வைபவங்கள், கோயில் கொடை விழாக்கள், குலசை தசரா போன்றவை எங்களுக்கு வாழ்வளிக்கும்.

ஆனால், கரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக எங்களதுவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, கடன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் என, அனைத்தும் கரோனாதொற்று ஓரளவு சீரடைந்த பின்னர் கழுத்தை இறுக்கும் நிலையில் அமையும். தற்போதைய நிலையில் முருகன் தான் காப்பாற்ற வேண்டுமென நினைத்து, வீட்டிலேயே முருகன் புகழை வாசித்து வருகிறோம். தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT