அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம் 
தமிழகம்

கரும்பூஞ்சை சிகிச்சை; அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

செய்திப்பிரிவு

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களிலும் கரும்பூஞ்சைக்கென சிறப்புப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 01) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கரும்பூஞ்சை நோயைக் கண்டறிவதற்கான வெளிப்புற நோயாளிகள் பிரிவு இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இது சிறப்பு மருத்துவப் பிரிவாக, பல்வேறு பரிசோதனைகளையும், வல்லுநர்களையும், சிகிச்சைகளையும் கொண்டதாக இருக்கும். இது ஒரு முன்னோடி முயற்சி.

தொடக்க நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். பிரத்யேகமான அமைப்பாக இது இருக்கும். இங்கு கண் மருத்துவர், காது - மூக்கு - தொண்டை மருத்துவர் உட்பட பல துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர்.

இங்கு தங்கி சிகிச்சை பெறும் வகையில், 120 படுக்கைகளும் மருத்துவ வளாகத்தில் உள்ளன. கரும்பூஞ்சை தொற்றுக்கு எதிராக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இதுகுறித்து ஆய்வு செய்ய 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டும் உள்ளது.

மொத்தமாகத் தமிழகத்தில் 518 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குணப்படுத்தப்படக் கூடியது. மருத்துவர்கள் பலரைக் காப்பாற்றி வருகின்றனர். இதுவரை கரும்பூஞ்சைக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு, புற்றுநோய், டயாலிசிஸ் செய்தவர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா வரும்போது ஸ்டீராய்டு செலுத்தப்படும்போது நோய் எதிர்ப்பு குறைகிறது. இதனால், கரும்பூஞ்சை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், பல நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத்தப்பட்டாலும், கரும்பூஞ்சை வரவில்லை என ஐரோப்பிய மருத்துவ முறை சொல்கிறது.

தொழில் ஆக்சிஜனை சுத்திகரித்துச் செலுத்தப்படுவதால் இத்தொற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் முடிவைத் தெரிவிப்பார்கள். அந்த முடிவு முதல்வரிடத்தில் ஒப்படைக்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களிலும் கரும்பூஞ்சைக்கென சிறப்புப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலையில் சென்னையில் இரு தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்தோம். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு செய்தோம். பெரிய கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கும்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT