குளச்சல், கொட்டில்பாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீனவர்களின் குடும்பத்தினரிடம், அமைச்சர் மனோதங்கராஜ் உறுதியளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கொட்டில்பாடு பகுதியில் கடலில் காணாமல் போன மீனவர்கிளன் குடும்பத்தினரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவிக்கையில்; "குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி, கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 12 மீனவர்கள், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 பேர் கேரள மாநிலம் வேப்பூர் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 5ம் தேதி அஜிமெர்சா என்ற விசைப்படகில் கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்குச் சென்றனர்.
கடந்த 13ம் தேதி டவ்தே புயலால் மங்களாபுரம் கடல் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், கன்னியாகுமரி, தக்கலை, மேல்புறத்தை சேர்ந்த மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த மீனவர்கள் என 16 பேர் இன்று வரை கரை திரும்பவில்லை.
இத்தகவலை மீனவப் பிரதிநிதிகள், பங்கு தந்தையர், மீனவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் அவர்களை மீட்கும் பணியில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், வறுமையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட மீன்வளத்தறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் சர்வதேச எல்லையில் ராணுவ உதவியுடன் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய, மாநில அரசுகளுடன் பேசி காணாமல் போன அனைத்து மீனவர்களும் சொந்த ஊர் திரும்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
எனவே மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசு உரிய அக்கறையுடன் துரிதமாக செயல்படும்" என்றார்.
நிகழ்ச்சியில் குளச்சல் பங்குத்தந்தை செல்வம், கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ், தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.