தமிழகம்

மதுரையில் குறையும் கரோனா பாதிப்பு: மாநாராட்சிப் பகுதிகளில் 16.3 சதவீதமாக இருந்த பாதிப்பு 7.2 சதவீதமாக சரிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. இது நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மருந்தும், எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படாதநிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று முதல் அலை பரவத்தொடங்கியபோது இந்தத் தொற்றின் முதல் உயிரிழப்பு மதுரை அண்ணாநகரில்தான் நிகழ்ந்தது.

பெரும் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால், தமிழகத்தின் மற்ற நகரங்களை ஒப்பிடும்போது மக்கள் நெருக்கம் மிகுந்த மதுரையில் முதல் அலை பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாக இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது அலை பரவத்தொடங்கியது முதலே மதுரையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தினமும் மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. இறப்பு விகிதமும் பல மடங்கு அதிகமாக இருந்தது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் படுக்கை கிடைக்கும் வரை மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறலால் இறந்த பரிதாபம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமலேயே வீடுகளில் சிகிச்சையில் இறந்தவர்களும் ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் இறந்தனர்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாநகராட்சி 100 வார்டுகளில்தான் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் மொத்த தொற்றில் 80 சதவீதம் மாநகராட்சிப்பகுதிகளில் கண்டறியப்பட்டது. சராசரியாக 900 முதல் 1000 பேர் வரை தினமும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டனர்.

கிராமங்களில் தொற்று குறைவாகவே காணப்பட்டது. கடந்த மே 20ம் தேதி மே 21ம் தேதி மாவட்டத்தில் 1, 269 பேருக்கு தொற்று ஏற்பட்டபோது, அதில் 1,039 பேர் மாநகராட்சி வார்டுகளில் கண்டறியப்பட்டனர்.

இது அன்றைய மாவட்ட மொத்த பாதிப்பில் 82 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு ஒரளவு குறையத்தொடங்கியது.

மே 24ம் தேதி மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் மொத்தம் 5,154 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில் 838 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 25ம் தேதி 5,784 பேரை பரிசோதனை செய்ததில் 633 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மே 26ம் தேதி 5,825 பேரை பரிசோதனை செய்ததில் 818 பேருக்கும், மே 27ம் தேதி 5,672 பேரை பரிசோதன செய்ததில் 692 பேருக்கும், மே 28ம் தேதி 6,329 பேரை பரிசோதனை செய்ததில் 655 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. மே 29ம் தேதி 5,961 பேரை பரிசோதனை செய்ததில் 478 பேருக்கும், மே 30ம் தேதி 5,771 பேரை பரிசோதனை செய்ததில் 462 பேருக்கும், மே 31ம் தேதி 4,697 பேரை பரிசோதனை செய்ததில் வெறும் 342 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் சீராக குறையத்தொடங்கியுள்ளது. மே 24ம் தேதி மொத்த பரிசோதனையில் மாநகராட்சி வார்டுகளில் 16.3 சதவீதமாக இருந்த தொற்று தற்போது 7.2 சதவீதமாக குறைந்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் அதிகமாக தொற்று பரவிய வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்படுத்தல் பகுதிகளை உருவாக்கி அங்குள்ள மக்களை அங்கிருந்து மற்ற இடங்களுக்கு இடம்பெயராத வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டது. 100 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுக்களை குடியிருப்புகளுக்கு அனுப்பி பரிசோதனைகளை அதிகளவு நடத்தி அதன் மூலம் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைப்பெற வைக்கப்பட்டது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT