தமிழக அரசு மீது பாஜக வைக்கும் விமர்சனங்களுக்கு எங்கள் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம் என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில், மணப்பாறையில் உள்ள காமராசர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, “45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறது. 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான கரோனா தடுப்பூசிகளைத் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 1.40 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு 52,000 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டன. புதுக்கோட்டையை விடத் திருச்சி பெரிய மாவட்டம் என்று கூறி, கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுள்ளோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கரோனா தடுப்பூசிகள் வந்துவிடும். அதன் பிறகு மீண்டும் திருச்சி மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி இடப்படும்.
திருச்சி மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 6 பேரும் சீரான நிலையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்குப் போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை மையங்களிலும் உள்ளன. இன்றைய நிலவரப்படி சுமார் 30 ஆக்சிஜன் படுக்கைகளும் மற்றும் 350-க்கும் அதிகமான சாதாரணப் படுக்கைகளும் காலியாக உள்ளன.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதல் தளம் கட்ட மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்க உள்ளார். மணப்பாறை மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பாஜகவினர் தொடர்ந்து தமிழ்நாடு அரசை விமர்சித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தலில் அவர்கள் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தனர். எனவே, அவர்கள் எங்களை வாழ்த்த மாட்டார்கள். எங்களை விமர்சனம்தான் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் மக்களுக்குப் பணியாற்றி நல்ல பெயர் எடுக்க வேண்டும். அவர்களது விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் கூற மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம். ஏனெனில், மக்களுடன்தான் நாங்கள் இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் கூறிக்கொண்டே இருக்க முடியாது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு, “மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியக் குழுத் தலைவர்களுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கிராமங்களில் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் கரோனா அறிகுறி உள்ளதா என்று கண்டறிய உத்தரவிடப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
முன்னதாக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ.5.5 லட்சம் மதிப்பில் மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் முட்டை, வேர்க்கடலை, சுண்டல், பாசிப் பருப்பு ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையிடம் வழங்கினார்.
ஆய்வின்போது சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமது, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் முத்து கார்த்திகேயன், வெஸ்ட் ரோட்டரி சங்கத் தலைவர் சி.எம்.சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், கரோனா தடுப்பு உதவி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 100 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி, கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.