அமைச்சரவை விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என பாஜக முடிவு எடுத்த சூழலில், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று என்.ஆர்.காங்கிரஸ் அறிவித்துள்ளது. இச்சூழலில் ஆளுநரை முதல்வர் திடீரென்று ராஜ்நிவாஸில் சந்தித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஒருமாதம் ஆன நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். அமைச்சரவை கோரிக்கைகளை பாஜக முன்வைத்தும் மவுனத்தை அவர் தொடர்வதால் தேசியத் தலைவர் நட்டா வரை சென்று பாஜக தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை முயன்றும், பாஜகவினரை ரங்கசாமி சந்திக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு இரு அமைச்சர், துணை சபாநாயகர் பதவி மட்டுமே தருவதில் ரங்கசாமி உறுதியாக உள்ளார். ஆனால், துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள், சபாநாயகர் பெறுவதில் பாஜக முனைப்புடன் உள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் தரப்பில் பலரும் அமைச்சர் ஆகும் எண்ணத்தில் உள்ள சூழலில் அவர்கள் பலரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இனி யாரும் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குச் செல்லவும் பாஜக முடிவு எடுத்துள்ளது.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு மீது பாஜக குற்றம் சாட்டி வந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மாநிலச் செயலர் ஜெயபால் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவில், "புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு இதுவரை பாஜகவில் இருந்து யாரும் முதல்வர் ரங்கசாமியைச் சந்திக்கவில்லை. எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
இச்சூழலில் இன்று மதியம் துணைநிலை ஆளுநர் தமிழிசையை ராஜ்நிவாஸ் சென்று முதல்வர் ரங்கசாமி திடீரென்று சந்தித்தார். இதுபற்றி விசாரித்தபோது, "ஆளுநர் தமிழிசைக்கு நாளை பிறந்த நாள். அவர் தெலங்கானா செல்வதால் மரியாதை நிமித்தமாக முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" என்று குறிப்பிட்டனர்.