கரோனா நோய்த்தொற்றும், இறப்பு விகிதமும் குறைந்தால் முழுமையாக ஊரடங்கை புதுச்சேரியில் விலக்க முடியும். தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதாரச் சீர்குலைவுதான் ஏற்படும். தடுப்பூசி, முகக்கவசம் மூலம் பொருளாதாரச் சவாலைச் சந்திக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு, 2000 பிபிஇ கவச உடைகளையும், மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை பாதுகாப்புக் கவச உடைகளுடன் பல்வேறு சாதனங்களையும், நிவாரணப் பொருட்களையும் சுகாதாரத்துறைக்கு இன்று வழங்கின.
பொது ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரணப் பொருட்களைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கிக் கூறியதாவது:
“புதுச்சேரியில் தெருமுனையில் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தற்போது தெருக்களுக்குச் சென்று தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி 1.4 லட்சம் கையிருப்பில் உள்ளது.
இளைஞர்களுக்கான தடுப்பூசி கையிருப்பில் உள்ள சூழலில் மேலும் 33 ஆயிரம் ஊசிக்கு ஆர்டர் தந்துள்ளோம். தடுப்பூசி தேவைக்கு முன்பாகவே நடவடிக்கை எடுப்பதால் தட்டுப்பாடு ஏற்படாது.
புதுச்சேரியில் நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் வகையில் தளர்வு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது 7-ம் தேதி வரை தளர்வு ஊரடங்கை நீட்டித்துள்ளோம். அதில் சுயதொழில் செய்வோருக்குத் தளர்வுகள் அறிவித்துள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு உள்ளது. கரோனா தொற்றும், இறப்பு விகிதமும் குறைந்தால் ஊரடங்கை முழுமையாக விலக்க முடியும்.
இன்னும் 3 நாட்களுக்கு சூழலைப் பார்த்து 7-ம் தேதிக்குப் பிறகான நிலையை முடிவு செய்வோம். தடுப்பூசி போட்டுக்கொண்டு, முகக்கவசம் அணிந்து பொருளாதாரச் சவாலைச் சந்திக்க வேண்டும். ஊரடங்கால் பொருளாதாரச் சீர்குலைவுதான் ஏற்படும் எனப் பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இக்காலகட்டம் சவாலாக இருந்தாலும் எச்சரிக்கையாகப் பணியாற்றி துணிச்சலாகக் கடக்க வேண்டும். முழுமையாக ஊரடங்கை விலக்க முடியும்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.