தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
தமிழகம்

தமிழக நிதி நிலைமை குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: கரோனா பணிக்கான செலவுகள், புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். கரோனா தடுப்புப் பணிக்கான செலவுகளை சமாளிப்பது, புதிய திட்டங்களை செயல் படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை கடந்த அதிமுக அரசு தாக்கல் செய்யவில்லை. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 32,530 கோடியாகவும், செலவு ரூ.2 லட்சத்து 46,694 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. மேலும், அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. கடன் அதிகரித்துள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பட்ஜெட் தாக்கலும் தள்ளிப்போனது. தற்போதும் கரோனா 2-ம் அலை தீவிரமாகி இருப்பதால் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட முடியாத நிலை உள்ளது.

அதே நேரத்தில் தற்போதைய கரோனா காலத்தில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையைச் சமாளித்து, அரசின் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி, கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் பற்றாக்குறை காரண மாகவும் அரசின் செலவினம் அதிகரித் துள்ளது. இதை சமாளிக்க வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம், புதிய மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்குதல், இவற்றுக்கான உடனடி செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டி யுள்ளது.

மேலும், கரோனா நிவாரணமாக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் மே மாதம் வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக இந்த மாதமும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4 ஆயிரம் கோடிக்கு அதிகமாக நிதி தேவைப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தவும் நிதி தேவைப்படுகிறது.

மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி மற்றும் இதர வகைகளில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

கரோனா பரவல் தடுப்பு மற்றும் அரசின் புதிய திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படும் நிலை யில், ஊரடங்கு காரணமாக அரசின் வருவாயும் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தடுத்த செலவினங்கள், புதிய திட்டங்களுக்கான செலவுகள், கரோனா பணிகளுக்கான செலவுகளை சமாளிப்பது, வருவாயை பெருக்கும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் முதல் 7 மாதங்களுக்கான நிதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், 8-வது மாதத்துக்கான செலவுக்குதான் புதிய ஒப்புதல் தேவைப்படும். எனவே, முழுமையான பட்ஜெட்டை இப்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’’ என்றனர்.

SCROLL FOR NEXT