தமிழகம்

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சையால் 40 பேர் பாதிப்பு; 2 பேர் உயிரிழப்பு: கடலூர் மாவட்டத்தில் 9 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 40 பேர் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒருவர், ஜிப்மரில் தற்போது பெண் ஒருவர் என 2 பேர் இதுவரை புதுச்சேரியில் இறந்துள்ளனர்.

தற்போது ஜிப்மரில் மட்டும் 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 30 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பலரும் நோய் முற்றி சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருப்பு பூஞ்சை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்தார்.

கடலூரில் 9 பேர் பாதிப்பு

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் 9 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 வயது முதல் 72 வயதுடைய இந்த 9 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரை சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் பொன்.கலியபெருமாள்(75) கரோனா அறிகுறிகளுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கண்ணில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து, பரிசோதனை செய்தபோது, அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரான அய்யாசாமி(40) பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்தார் அவருக்கு கருப்புபூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதியானது. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குமாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி கூறியதாவது: திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் கிடைத்த பிறகே இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

குன்னம் கிராமத்தைச் சேர்ந்த லெனின்(40) என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT