திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 5,859 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவுக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாகத் தனக்கு காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருந்ததால் தாமாக முன்வந்து மாவட்ட ஆட்சியர் நேற்று கரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்குத் தொற்று இருப்பதை இன்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்பதற்காகப் பரிசோதனை செய்ததில் 5% நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பாதிப்பு அதிக அளவில் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தா ஈடுபட்டபோது, அவருடன் சக ஊழியர்கள், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆகையால் அவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.