சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் முன்பதிவு மையம் செயல்படுவதால் கர்ப்பிணிகளுக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் தினமும் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதற்காக அவர்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கணினி மையத்தில் முன்பதிவு செய்கின்றனர். மேலும் தங்களுடன் உறவினர்கள் வராதநிலையில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோரோ வரிசையில் நின்று முன்பதிவு அட்டை பெறுகின்றனர்.
அதே வரிசையில் கர்ப்பிணிகள், விபத்து சிகிச்சைக்கு வருவோரின் உறவினர்கள், பிற நோயாளிகள் நின்று முன்பதிவு செய்கின்றனர்.
இதனால் மூச்சுத்திணறலுடன் வருவோர் வரிசையில் நிற்பதற்கு சிரமப்படுவதோடு, கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு கரோனா பரவும் அபாயமும் உள்ளது.
இதையடுத்து கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், பிற நோயாளிகளுக்கும் தனித்தனியாக முன்பதிவு செய்யும் மையத்தை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறுகையில், "ஏற்கெனவே கரோனா வார்டில் முன்பதிவு செய்யும் மையம் செயல்பட்டது. தற்போது அந்த இடம் மருத்துவர்கள் அமரும் அறையாக மாற்றப்பட்டது.
மீண்டும் அதே பகுதியில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் முன்பதிவு செய்யும் மையத்தை அமைக்க வேண்டும்" என்று கூறினர்.