புதுச்சேரியில் இன்றுவரை 1,629 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 812 பேர் இந்த மே மாதத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள். கடந்த ஓராண்டு கால இறப்புக்கு இணையாக புதுச்சேரியில் இம்மாதம் இறப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில் குணமடைவோர் சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தன. குறிப்பாக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வரை 683 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். தேர்தலுக்குப் பிறகு கரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் மட்டும் 122 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து மே மாதம் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரும், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் உச்சத்தை அடைந்தது.
புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களிலும் கரோனாவால் இன்று மட்டும் 18 பேர் இறந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையிலான இம்மாதத்தில் புதுச்சேரியில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மே மாதத்தில் இறந்தோரின் எண்ணிக்கையானது, கடந்த ஓராண்டு கால இறப்புக்கு இணையாக உள்ள சூழலும் நிலவுகிறது.
புதுச்சேரியில் மொத்தம் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் 1,327 பேரும், காரைக்காலில் 207 பேரும், ஏனாமில் 69 பேரும், மாஹேவில் 26 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது
புதுச்சேரியில் இறப்பு எண்ணிக்கை குறையாவிட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. நேற்று 7 ஆயிரம் பரிசோதனைகள் நடந்ததில் புதிதாக 627 பேருக்குத் தொற்று இன்று உறுதியானது.
ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 1,629 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைவோர் சதவீதம் 87.8 ஆக அதிகரித்துள்ளது.