சென்னை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 120 படுக்கை வசதியுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ கோவிட் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் 150-க்கும் மேற்பட்ட கோவிட் சிகிச்சை மையங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்று பாதித்த நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிரத்யேகமாக 10 யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையம் 11-வது யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையமாகும். இதேபோன்று, ஒரு ஆயுர்வேத முறையிலான சிகிச்சை மையமும், 50 சித்த வைத்திய சிகிச்சை மையங்களும் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.
அனைத்து யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கோவிட் சிகிச்சை மையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 150-க்கும் மேற்பட்ட கோவிட் மருத்துவமனை அல்லது சிகிச்சை மையங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் அலோபதி மருத்துவத்தோடு இணைந்து கூட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வரும் தொற்று பாதித்த நபர்களுக்கு இயற்கை மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, அதே நேரத்தில் ஆரோக்கியமான சளிசவ்வு உருவாக்க சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இம்மையத்தில் மொத்தமுள்ள 120 படுக்கைகளில் 40 படுக்கைகள் மகளிருக்கு எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாறு, வேம்பு மற்றும் மஞ்சள் நீர் கொண்டு எனிமா எடுத்தல், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம், வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் கலந்த உருண்டை ஆகியவை வழங்கப்படவுள்ளன.
மேலும், வஜ்ராசனம், பஸ்திரிகா பிராணயாமம், மக்கராசனம், விரைவான மற்றும் ஆழமான உடல் தளர்வு பயிற்சி போன்ற யோகா சிகிச்சைகள், உப்பு நீர் மூலம் நாசிகளை சுத்தப்படுத்தும் சிகிச்சைகள், அக்குபஞ்சர் சிகிச்சைகள், சூரிய குளியல் சிகிச்சை மற்றும் நறுமண சிகிச்சை ஆகியவற்றின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.