கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள TNPL township-ல் உள்ள சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை ஆகும்.
இந்த சிகிச்சை மையத்திற்குத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி இம்மருத்துவமனைக்குக் கிடைத்திட, சுமார் 1 கோடி ரூபாய் செலவில், தேவையான உபகரணங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், அருகிலுள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.