கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம், உதகை மத்திய பேருந்து நிலையத்துக்கு, தினமும் 15 டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்குகின்றனர்.
இந்த காய்கறிகளை, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில்விற்பனை செய்ய அனுமதிச்சீட்டுபெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து தோட்டக்கலை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள், உதகை மத்திய பேருந்து நிலையம், என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்தும் இடத்தில், வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்தவியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது ‘வாகனங்கள் முன்பு விலைப்பட்டியல் ஒட்ட வேண்டும். கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக் கூடாது. அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒட்டாமல், காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வந்த ஒருவரது வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் சுரேஷ் தெரிவித்தார்.