தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ரயில், பேருந்து, ஆட்டோ சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனால், மின்சார ரயில்களின் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த வாரம் சென்னையில் மொத்தம் 151 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதற்கிடையே, தற்போது மின்சார ரயில்களின் சேவை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 208 மின்சார ரயில்கள் இயக்கப்படும். சென்னை - திருவள்ளூர், அரக்கோணம் - 42, திருவள்ளூர், அரக்கோணம் - சென்னை - 44, சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - 16, கும்மிடிப்பூண்டி, சூலூர்ேட்டை - சென்னை - 16, சென்னை கடற்கரை - வேளச்சேரி - 12, வேளச்சேரி - சென்னை கடற்கரை - 12, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் - 33, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் - 33 என மொத்தம் 208 மின்சார ரயில்கள் இயக்கப்படும். ஆனாலும், ஞாயிறு காலஅட்டவணை சேவையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.