திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.அரவிந்தனை கடந்த மே 10-ம் தேதி எஸ்பிசிஐடி எஸ்பியாக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 20 நாட்களாக திருவள்ளூர் எஸ்பி பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தானியங்கி, கணினிமயமாக்கல் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.வருண்குமாரை நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்த வி.வருண்குமாருக்கு, மாவட்ட காவல் துறையினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்ட வி.வருண்குமார், அலுவலகத்தில் முறைப்படி கையெழுத்திட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.வருண்குமார், "திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 6379904848 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.