தமிழகம்

வீடு வீடாகச் சென்று கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்: ஒரு வாரத்தில் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு

செய்திப்பிரிவு

வீடு வீடாகச் சென்று கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை நேற்று வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட் டுள்ளதாக தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மருத்துவ உபகரணங்களை சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், அமைச்சர் கூறியது:

கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கும் விதமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சி களுக்கும் 1,500 பல்ஸ் ஆக்ஸிமீட்டர், 1,500 தெர்மல் ஸ்கேனர் ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு வாரத்தில் கிராமப் பகுதிகளில் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சி ஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட கட்டுமான பணியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் வே.சாந்தா, எஸ்.பி கயல்விழி, எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாகப்பட்டினத்தில்...

முன்னதாக, நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில், சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று காலை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, நாகை டாடா நகரில், 18 முதல் 44 வயதுடையோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார். பின்னர், கடந்த மாதம் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் புயலில் சிக்கி காணாமல் போன நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் பிரவீன் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன், நகராட்சி ஆணையர் ஏகராஜ், எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT