சங்கரன்கோவிலில் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்துக்கு திரண்ட சிஐடியு தொழிற்சங்கத்தினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தமிழகம்

விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு; சிஐடியு தொழிற்சங்கத்தினர் கஞ்சித் தொட்டி திறக்க முயற்சி: சங்கரன்கோவிலில் பரபரப்பு, போலீஸ் குவிப்பு

செய்திப்பிரிவு

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற் சங்கத்தினர் சங்கரன்கோவிலில் கஞ்சித்தொட்டி திறக்க முயன்ற னர். அங்கு போலீஸார் குவிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள், கூலி உயர்வு கேட்டு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த சிஐடியு தொழிற்சங்கத்தினர், கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, மற்ற சில சங்கத்தினர் முன்னிலையில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு எதிப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவிலில் நேற்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 4-ம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

விசைத்தறி தொழிலாளர்களும் போராட்டம் நடத்துவதற்காக அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறை யினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் அறிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT