கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீடுகள் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து குடியிருப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை யில் கனமழையால் பழுதடைந்த சாலைகள், வீடுகளை அமைச்சர் மனோதங்கராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித் ததாவது:
கனமழையால் பேச்சிப்பாறை, கோதையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் மார்த்தாண்டம் முதல் பேச்சிப் பாறை வரையிலான சாலையில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. சாலை சீரமைக்கும் பணியை பார்வையிட்டேன்.
பணிகளை விரைந்து முடித்து வாகனப் போக்குவரத்துக்கு தயார் செய்ய நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிரந்த தீர்வு ஏற்பட அங்கு ரூ.50 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் மற்றும் சாலைகளை சீரமைத்திட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலடிப்பதால் தண்ணீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் முழுமையாக சேதமடைந்த கூரை வீட்டுக்கு தலா ரூ.5 ஆயிரம், பகுதி சேதமடைந்த கூரை வீட்டுக்கு தலா ரூ.4,100 வீதம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரண நிதி வீட்டை சரிசெய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதால், இலவச வீடு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு முழு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களிடம் இருந்து மனுக்கள் பெற்று, அவர்களுக்கு புதிய குடியிருப்புகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, குலசேகரம் திருநந்திக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறினார். தேவையான உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தார்.