செம்பரம்பாக்கம் ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பெய்த கனமழையால், சென்னைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியிலிருந்து 20 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெய்த கனமழையால், ஏரியிலிருந்து மீண்டும் அடையாற்றில் 28 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி உடையப்போவதாக பொதுமக்கள் மத்தியில் சிலர் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 493 கனஅடியாக உள்ளது. வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது. அதனால் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.