தமிழகம்

மருத்துவமனைகளுக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சேவாபாரதி வழங்கியது 

செய்திப்பிரிவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆம்பூர், ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சேவாபாரதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சேவாபாரதியின் மாநில அமைப்புச் செயலாளர் கா.சீனிவாசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற சுவாமி விவேகானந்தரின் உரைக்கு ஏற்ப ‘சேவாபாரதி தமிழ்நாடு’ கடந்த 21 ஆண்டுகளாக சமுதாயச் சேவை ஆற்றி வருகிறது. பேரிடர்க் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சேவாபாரதி தமிழ்நாடு நன்கு தேர்ச்சி பெற்ற ஓர் அமைப்பு. 2004 சுனாமி, 2015 சென்னை வெள்ளம், கடந்த ஆண்டு கரோனா பேரிடர் போன்ற துயரமான காலகட்டங்களில் சேவாபாரதி தொண்டர்கள் முழுமூச்சுடன் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது இரண்டாவது கரோனா அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவில் நிவாரணப் பணி செய்வதற்காக டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சேவா இண்டர்நேஷனல் தேவையான மருத்துவ உபகரணங்களை அளித்து வருகிறது. இதுவரை 18 மாநிலங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை சேவா இன்டர்நேஷனல் வழங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxigen Concentrators) அளிக்க முன்வந்துள்ளது. அதன் முதல் தொகுப்பாக 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று சென்னை வந்தடைந்தன. அவை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆம்பூர், ஓசூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உள்ளுர் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளோம்.

சென்னை வியாசர்பாடியில் கரோனா சேவை மையம் ஒன்று தொடங்கியுள்ளோம். அம்மையம் 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ஆத்தூர், மேட்டூர் அரசு மருத்துவமனைக்குத் தேவையான கட்டில் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியுள்ளோம்''.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT