புதுச்சேரியில் கரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ஏழு பிராண வாயு சுவாசக் கருவிகளை அரசு மருந்தகத்திலிருந்து பெற்று சுகாதாரத்துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஒப்படைத்தார். அதைச் சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருண் பெற்றுக்கொண்டார்.
அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்திய அரசு இதுவரை 17 சுவாசக் கருவிகளைப் புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 350 சுவாசக் கருவிகள், 1800 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரெம்டெசிவிர், பூஞ்சை மருந்து போன்றவை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரசின் முயற்சியால் புதுச்சேரியில் கரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதர மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்ல பலனைத் தந்துள்ளது.
தடுப்பூசி மட்டுமே முழு எதிர்ப்பு ஆயுதம். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுவரை புதுச்சேரியில் 2.8 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். வாகனங்கள் பழுது நீக்குவது போன்ற சுயதொழில் செய்வோருக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மனிதாபிமான அடிப்படையில் இந்தத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.