தேர்தலில் வென்று ஒரு மாதமாகவுள்ள சூழலிலும் புதுச்சேரி அமைச்சரவை அமையாமல் உள்ளது. இச்சூழலில் பாஜகவினரைச் சந்திப்பதை முதல்வர் ரங்கசாமி தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் டெல்லி சென்று பாஜக எம்எல்ஏக்கள் தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து புதுச்சேரி திரும்பியுள்ளனர். ஓரிரு நாட்களில் அமைச்சரவை பிரச்சினை தீர்வுக்கு வரும் என்று பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ்-10 , பாஜக-6 வென்று இக்கூட்டணி 16 இடங்களைப் பெற்று பெரும்பான்மை பெற்றது. இக்கூட்டணி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவியேற்றார். ஆனால், அமைச்சர்கள் இதுவரை பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
பெரிய மாநிலங்களில் அரசு பொறுப்பேற்று அமைச்சர்கள் துறைப் பணிகளைத் தொடங்கிய நிலையில் சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொடர்ந்து அமைச்சர்களை நியமிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கரோனா பணிகள் கடும் சிக்கலில் உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெறுவர். பாஜக தரப்பில் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள், சபாநாயகர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கைதான் வலுவாகத் தொடர்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு துணை முதல்வர் பதவி உருவாக்கத்தை ஏற்காததுடன் சபாநாயகர் பதவி தரவும் மறுத்து இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை பாஜக தர திட்டமிட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பாஜக தனது எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை என்.ஆர்.காங்கிரஸை விட உயர்த்தியுள்ளது. பாஜகவினர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பாஜகவின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயமும், பாஜக பொதுச் செயலாளர் எம்எல்ஏ ஏம்பலம் செல்வமும் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை நேற்று சந்தித்தனர். புதுச்சேரி அரசியல் சூழல் தொடர்பாக பேசிவிட்டுப் புதுச்சேரி திரும்பியுள்ளனர்.
இதுபற்றி பாஜகவின் முக்கிய நிர்வாகி கூறுகையில், "ரங்கசாமிக்கு முதல்வர் பதவிக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கும் முன்பு, பாஜகவுக்கு சபாநாயகர், 3 அமைச்சர்கள், நாடாளுமன்றச் செயலாளர் பதவி கேட்டோம். இதற்கு ரங்கசாமி ஒப்புக் கொண்டார். தற்போது அமைச்சரவை தொடர்பாக பேச ரங்கசாமியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.
தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விளக்கம் அளித்து உள்ளோம். இதனால் ஓரிரு நாட்களில் அமைச்சரவை பிரச்சினை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இதன் பிறகும் ரங்கசாமி மாறவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பாஜக மேலிடம் எடுக்கும். இதில் எங்களது முடிவை ரங்கசாமி, கட்டாயம் ஏற்பார்" என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார்.