தமிழகம்

கரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தடுப்பூசி போட்ட வணிகர்களை மட்டுமே பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகைப்பொருட்களை நேரில் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரவர்களுக்கு வரும் தொந்தரவுகள் அடிப்ப டையில் மருத்துவர்கள் சிகிச்சை வழங்குகின்றனர்.

அதனால், பொதுமக்களை இந்த நோயிலிருந்து பாதுகாக்க அவர்களை தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு ஊக்குவித்து வருகி றது. தற்போது தடுப்பூசிகள் போதிய அளவு இல்லாவிட்டாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை விரைவுப்படுத்தி உள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யவும், தமிழகத் திலேயே உற்பத்தி செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 428 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், விரைவில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமி ழக அரசு காய்கறிகளை உள்ளாட்சி அமைப்புகள், தோட்டக்கலைத்துறை சார்பில் குடியிருப்புகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்க அனுமதித்துள்ளது. தற்போது மளிகைப்பொருட்களையும் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமாக நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நேரில் விற்கும் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே விற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறியதாவது: வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருட்களை கொண்டு சென்று வழங்கும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் தடுப்பூசி போட்ட வியாபாரிகள், ஆன்லைன் நிறுவன ஊழியர்களை மட்டுமே நேரில் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT