திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி கடந்த 6 மாதங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து, மருத்துவத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டார். ஆனாலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் இன்று மாலை பரமேஸ்வரி காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி:
“திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப திமுக தோள் கொடுத்துத் துணை நிற்கும்”.
இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.