பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச் சாரியார்களுக்கு இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சிவாச்சாரியார்களுக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. பல்வேறு கேள்வி களுக்கு விளக்கம் கேட்டு கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன் நேற்று முன்தினம் சிவாச்சாரியார்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், “ஆணையர் அனுமதி இல்லாமல் பழக்க வழக்கம் மற்றும் பாரம்பரியம் அடிப்படையில் பெரிய குருக்களான அலாஸ்ய குருக்கள் மற்றும் பி.தியாகராஜ குருக்கள் பூஜை செய்கிறார்கள். பரம்பரை அர்ச்சகர் உரிமை என்பது உரிய சட்டம் மூலம் நீக்கப்பட்டுள்ளது. அபிஷேகம், கோ பூஜை ஆகிய வழிபாடுகளில் பேதம் பிரித்து செயல்படுகின்றனர். உங் களுக்குள் வேறுபாடு எவ்வாறு எழுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
மூலவர் மற்றும் அம்பாள் சன்னதி தவிர சுற்று சன்னதிகளில் குருக்கள் இருப்பதில்லை. குருக்கள் விவரங்களும் அலுவலகத்தில் இல்லை. வேதம் படித்ததற்கான விவரம், முழு விலாசம், புகைப்படம், எந்த சன்னதியில் எவ்வளவு நாட்கள் பூஜையில் இருப்பார்கள் என்ற விவரத்தை அளிக்க வேண்டும். இந்து சமய அறநிலைய சட்டம் மற்றும் விதிகளின்படி வேலைவாய்ப்பு விளம்பரம் செய்து அர்ச்சகர்களை நியமனம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
முறை குருக்கள் ஒருபோதும் சன்னதியில் இருப்பதில்லை. வெளியில் சென்று பொருள் ஈட்டுவதிலேயே குறிக் கோளாக உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆகமம் பயின்ற சிவாச்சாரி யார்களை நியமனம் செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அமைச்சர், ஆணையர் ஆகியோருக்கு தெரிவிக்காமல் முறை குருக்களால் அழைத்து வரப்பட்ட தட்சணை முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். கேட்கப்பட்டுள்ள விளக்கங்கள் குறித்து ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியாக…
இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறும்போது, “கோயில் குடமுழுக்கு பணிக்கு சிவாச்சாரியார்கள் மூலம் பல உபயதாரர்கள் முன்வருகின்றனர். அவர் களால், நேரடியாக எந்த ஒரு பணியையும் செய்ய முடியவில்லை. பணமாக கொடுக்க வேண்டும் என்ற கெடுபிடி நிலவுகிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே விடியல் மீட்புப் பேரணியில் அவரை, சிவாச்சாரியார்கள் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் எதிரொலியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றனர்.