கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் ஆக்சிஜன் பேருந்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உள்ளிட்டோர். 
தமிழகம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு நடமாடும் ஆக்சிஜன் பேருந்து: அமைச்சர் முன்னிலையில் ஆட்சியரிடம் சிஐஐவினர் வழங்கினர்

க.ராதாகிருஷ்ணன்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு படுக்கை, இருக்கை வசதியுடன் கூடிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள நடமாடும் ஆக்சிஜன் பேருந்தை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூர் கிளையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் நேற்று வழங்கினர்.

கரோனா தொற்றுத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் கிளை மற்றும் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பாக ரூ.2.80 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினர்.

நடமாடும் ஆக்சிஜன் பேருந்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்துப் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் கிளை மற்றும் அதன் துணை அமைப்பான யங் இன்டியன்ஸ் சார்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் கரோனா தொற்றாளர்கள் ஆக்சிஜன் படுக்கைக்குக் காத்திருக்கும் நிலையில் இப்பேருந்தில் தங்கி சிகிச்சை பெறலாம்.

இப்பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் 3 படுக்கை மற்றும் 7 இருக்கைகள் உள்ளன. இப்பேருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கும். தேவையைப் பொறுத்து நோயாளிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று நோயாளிகளை அழைத்து வரவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன திருமண மண்டபத்தில் தயாராகி வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 156 அமைக்கும் பணிகள் இரண்டொரு நாளில் முடிவடையும். காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இதனைத் திறந்து வைப்பார்.

கரோனா தொற்றாளர்கள் இறப்பு மறைக்கப்படுவதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் 1,500 பேருக்குதான் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது 5,000க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர் ஆட்சியில் இருந்தபோதுதான் 443 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் வழங்கப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 3 வாரங்கள்தான் ஆகிறது. தற்போது இறப்பு விவரங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் சமமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது''.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இரா.முத்துச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் கிளை தலைவர் புஷ்பராஜன், துணைத் தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT