இந்திய அரசியல் நிர்ணய சபைஉறுப்பினராக பதவி வகித்த முன்னாள் எம்பி டி.எம்.காளியண்ணன் கவுண்டர் (101), உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். திருச்செங்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
தனது 28-வது வயதில் (1948) இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1949-ம் ஆண்டு அரசியல் சாசனத்தை, இந்திய அரசியல் நிர்ணயசபை அங்கீகரித்தது. அப்போதுஅரசியல் நிர்ணய சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் புதிய மக்களவை உறுப்பினர்களாக (எம்பி) ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அதன்படி காளியண்ணன் எம்பியாகப் பதவியேற்றார்.
அதன் பின்னர், இந்திய அரசியல் சாசனப்படி 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1957, 1962 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில், காங்கிரஸ் கட்சிசார்பில் போட்டியிட்டு காளியண்ணன் வெற்றி பெற்றார். 1967-ல் நடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த காளியண்ணன், திமுக ஆட்சியில் அமைந்த மேல்சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளின் துணைத்தலைவராகவும், சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமையவும், அதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் பெருகவும் காரணமாக இருந்தார். 1954-ல் திருச்செங்கோட்டில்அவ்வையார் பெயரில் இலவச கல்வி அளிக்கும் பள்ளியைத் தொடங்கிய காளியண்ணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நூலகங்களைத் தொடங்க காரணமாக இருந்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அந்தகால தேர்தல் நடைமுறைகள் குறித்து, ‘இந்து தமிழ்' நாளிதழுக்கு காளியண்ணன் பேட்டி அளித்தார். கடந்த மாதம்நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தனது 101-வது வயதிலும், வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையாற்றியுள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட காளியண்ணன், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த காளியண்ணனுக்கு பார்வதி என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையம் மின் மயானத்தில் காளியண்ணன் கவுண்டர் உடலுக்கு காவல் துறையினர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர். இதில் அமைச்சர் மா.மதிவேந்தன், ஆட்சியர் கா.மெகராஜ், நாமக்கல் எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.