செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நோய் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், கரோனா பாதித்தவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருகிறது. இந்த நோய் தாக்கி ஏற்கெனவே அமைந்தக்கரணை கிராமத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர் ரமேஷ்(42) என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று முரளிஎன்ற மேலும் ஒரு டாஸ்மாக் ஊழியர் இறந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(43). இவர் அரைப்பாக்கம் என்ற பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் முரளிக்கு திடீரென வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. நேற்று கண்ணில் வலி அதிகமான நிலையில் அவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு இந்த தொற்று உள்ளது. கரோனா தாக்கத்தில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.