திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று திருத்தணியில் நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் திறம்பட செயல்படாத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை: ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருத்தணி, திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட குடும்ப நலம் மற்றும் ஊரக நலப் பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், 2 சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி போடும் பணி, காய்ச்சல் கணக்கெடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து, அமைச்சர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், கரோனா தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டது தெரியவந்தது.

அப்போது அமைச்சர் கூறும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளில் திறம்பட செயல்படாத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசின் பெருமுயற்சியால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

திருவள்ளூர் நகராட்சியில் 9,088 பேரும், திருத்தணி நகராட்சியில் 2,134 பேரும் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, இரு நகராட்சிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில், குறைவாகவே உள்ளது. ஆகவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிறகு, திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் நாசர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், ஆவடி, பூந்தமல்லி, மாதவரம், மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர், கரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

செயல் அலுவலர் இடமாற்றம்

பால்வளத் துறை அமைச்சர் தலைமையில், திருத்தணியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, களப்பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படாததுதான் காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தலின் பேரில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியை ஆரணி பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT