தமிழகம்

அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்துக்கு வழங்கிய ரூ.100 கோடியில் திருமங்கலத்துக்கு மட்டும் ரூ.90 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.மூர்த்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்துக்கு ரூ.100 கோடி வழங்கியதில், திருமங்கலம் தொகுதிக்கு மட்டும் ரூ.90 கோடியை ஒதுக்கி பாரபட்சமாக நடந்துகொண்டது முந்தைய அதிமுக அரசுதான் என அமைச்சர் பி.மூர்த்தி குற்றம் சாட்டினார்.

மதுரை அருகே ஒத்தக்கடையில் மினி கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். சு.வெங்கடேசன் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: கரோனா பரவல் குறித்து வெளிப்படையாக ஆலோசனை வழங்க மதுரை மாவட்டத்தில் 2முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்கும்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது வராமல் வெளியிடங்களில் முன்னாள் அமைச்சர்கள் தவறாக விமர்சிக்கின்றனர். கரோனா தொற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினால், அதற்கு காரணமே முந்தைய அதிமுக அரசுதான். தேர்தல் காலத்தில் 2 மாதங்கள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாததே தொற்று பரவ காரணம். படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை நிவர்த்தி, பணியாளர்கள் தேர்வு என அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் தற்போது நடக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு நோயாளி கூட இறக்கவில்லை.

அதிமுக எம்எல்ஏ.க்களின் தொகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளில் பாரபட்சம் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2 நாட்களாக திருமங்கலம், மேலூர், மதுரை மேற்கு என அதிமுக எம்எல்ஏ.க்களின் தொகுதிகளில்தான் முழு வீச்சில் ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுவதால், அதிமுக ஆட்சியில் நடந்த பாரபட்சம் குறித்து ஒரு தகவலை மட்டும் குறிப்பிடுகிறேன். தேர்தலுக்கு முன்பாக 100 நாள் வேலைக்காக மதுரை மாவட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. 10 தொகுதிகளுக்கான இந்தத் தொகையைச் சரியாக பகிர்ந்தளிக்காமல் திருமங்கலம் தொகுதிக்கு மட்டும் ரூ. 90 கோடியை ஒதுக்கி பாரபட்சமாக நடந்துகொண்டது அதிமுக அரசுதான். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT