திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.
திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உரிய நேரத்தில் திறக்க வேண்டும், எடை போடப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு செல்ல லாரிகளை ஏற்பாடு செய்ய வேண்டும், கூடுதல் எடை இயந்திரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் அவர், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். மேலும் அவர், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 வயது முதல் 44 வயது வரையும் மற்றும் 45 வயது முதல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். அதன்பிறகு, போளூர் டைவர்ஷன் சாலை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் பரிசோதனை முகாமை பார்வையிட்டார்.
இதையடுத்து, களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரணியில் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், ஆரணி நகரம் சைதாப்பேட்டை அண்ணா நகரில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் பரிசோதனை முகாமை பார்வை யிட்டார். அப்போது. அவர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
பின்னர் அவர் வீடு , வீடாக சென்று வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை நடைபெறுவதை நேரில் ஆய்வு செய்தார். மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்ட 10 ஆக்சிஜன் சிலிண்டர் கள், 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்-95 மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் மற்றும் சானி டைசர்கள் ஆகியவற்றை ஆரணி அரசு மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினருடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற துணை சபா நாயகர் பிச்சாண்டி ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆரணி பகுதி மக்களுக்கு தேவை யான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தி.மலை மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை” என்றார். அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.