பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டுக்கான நெட்மீட்டர் தட்டுப்பாடு இல்லை: மின்வாரிய அதிகாரிகள், நிபுணர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சூரிய ஒளி மின்சார உற்பத்திக்குப் பயன்படும் நெட் மீட்டர்களுக்கான தட்டுப்பாடு ஏதும் இல்லை என, மின்வாரிய அதிகாரிகளும், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டின் பல மாதங்கள் சூரிய ஆற்றல் அதிக அளவு கிடைக்கிறது. இதனால், சூரிய ஒளி மின்சாரம் அதிக அளவு பெறப்படுகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக, தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தின் பயன்பாடு மிக மோசமாக உள்ளதாகவும், இதற்கு மின்வாரியத்தில் உள்ள சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும், சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த உதவும் நெட்மீட்டர் தட்டுப்பாடு உள்ளதாகவும், 'இந்து தமிழ்' நாளிதழின் இணையதளப் பக்கத்தில் அண்மையில் செய்தி வெளியானது.

ஆனால், இக்குற்றச்சாட்டை சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட்டு்ள்ள நிபுணர்களும், மின்வாரிய அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஏ.கே.பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.ஆனந்த் கூறுகையில், "தமிழகத்தில் மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்து வருவதால், சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளிலேயே கூட சூரிய ஒளி தகடுகளை அமைத்து வீட்டுக்குத் தேவையான சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கின்றனர்.

மேலும், சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் நெட்மீட்டர் தட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் கிடையாது. விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைக்கிறது. இந்த சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான கட்டமைப்பை நிறுவுவதற்கு மூலதன செலவுதான் அதிகமாக உள்ளது. அந்தச் செலவை மட்டும் அரசு குறைத்தால் இத்துறையில் ஈடுபட மேலும் பலர் ஆர்வம் காட்டுவர்" என்றார்.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காகத் தமிழக அரசு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை ஏற்படுத்தி அதன் மூலம் செயல்படுத்தி வருகிறது. அத்துடன், மத்திய அரசு அறிவிக்கும் சூரிய மின்சாரத்தைத் தயாரிக்க மானிய விலை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT