பொற்செழியன்: கோப்புப்படம் 
தமிழகம்

உணவு செரிமான பிரச்சினைக்கு மருந்து பரிந்துரைத்த 'சாப்பாட்டு ராமன்' எனும் பொறியாளர் கைது; அதிகமாக சாப்பிட்டு யூடியூபில் பிரபலமானவர்

ந.முருகவேல்

உணவு செரிமான பிரச்சினைக்கு மருந்து பரிந்துரைத்த 'சாப்பாட்டு ராமன்' எனும் பொற்செழியன் கைது செய்யப்பட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் பொற்செழியன். பொறியாளரான இவர், உணவு தொடர்பான பல்வேறு தகவல்களை வலைதளங்களில் பதிவேற்றியதன் மூலம், 10 லட்சத்துக்கும் அதிகமான தொடர்பாளர்களை தன்வசம் வைத்துள்ளார்.

மாற்று வழி மருத்துவம் படித்த மருத்துவர் 'சாப்பாட்டு ராமன்' எனும் பெயரில், அவ்வப்போது இவர் அதிகப்படியாக உணவுகளை உண்டு, அந்த வீடியோவை, முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். மேலும், உணவு செரிமானத்திற்கு இயற்கை மருந்துகளை அறிமுகப்படுத்தி வந்தார். இந்த நிலையில், ஆங்கில மருந்துகளையும் இவர் பரிந்துரைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை கூகையூரில் இவர் நடத்திவந்த கிளினிக்கை இன்று (மே 28) சோதனையிட்டனர். அங்கு கரோனா நோய்க்கான பரிந்துரை மருந்துகளும், மேலும் இதர நோய்களுக்கான ஆங்கில மருந்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது கிளினிக்கை சீல்வைத்த சுகாதாரத்துறையினர் பொற்செழியன் மீது கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸார் அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT