தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் தினமும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்தது. விற்பனையாகும் தொகையை விற்பனையாளர்கள் வங்கியில் செலுத்த வேண்டும்.
விற்பனையாளர்கள் விற்பனை தொகையை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது, அவர்களை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளைஅடிக்கும் சம்பவங்கள் அரங்கேறிவந்தன. விற்பனை தொகையைகடையில் வைத்து இருந்தாலும்,இரவு நேரங்களில் கடையின்பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாக நடந்து வருகின்றன.
எனவே, பாதுகாப்புகாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து, தற்போது முதல்கட்டமாக 3,500 மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு கடையிலும் தலா 3 சிசிடிவி கேமரா என மொத்தம் 3,500 மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட மேலாளர்கள் அலுவலகம், மண்டல மேலாளர்கள் அலுவலகம், மேலாண்இயக்குநர் அலுவலகத்தில் இருந்து இந்த கேமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன.