தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் கூடங்குளம், மேட்டூர் உள்ளிட்ட 10 மின் நிலையங்களில் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காற்றாலைகளின் அதிகபட்ச மின் உற்பத்தியால் மின்வெட்டு அமலாகவில்லை.
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் மின்வெட்டு அறவே நீக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 24 மணி நேர மின் விநியோகம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மின் நிலையங்களில் உற்பத்தி சரிந்தாலும், காற்றாலைகளின் உற்பத்தியால் மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதன்காரணமாக மின் விநியோகம் திருப்திகரமாக உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தமிழகத்துக்கு மின்சாரம் தரும் கூடங்குளம், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர், நெய்வேலி, ராமகுண்டம், எண்ணூர், தால்சர் உள்ளிட்ட 10 மின் நிலையங்களிலுள்ள, சில குறிப்பிட்ட அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 அலகுகளில் 4,330 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதில் சுமார் 2,500 மெகாவாட், தமிழகத்துக்கு விநியோகம் செய்யப்படுவதாகும்.
மின் உற்பத்தி சரிந்திருந்தாலும், செவ்வாய்க்கிழமை காற்றாலைகளில் 2,537 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. மொத்தம் 10,239 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானதில், 24 மணி நேரத்தில் மின் வெட்டே இல்லாமல் 264.33 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.