கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுரங்கம் தோண்டுவது, உயர்மட்ட பாதைகள் அமைப்பது, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள கட்டுமான நிறுவனங்களைத் தேர்வு செய்து, அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வாகியுள்ள தனியார் நிறுவனங்கள், சுரங்கப்பாதை அமைப்பதற்கான ராட்சத இயந்திரங்களைக் கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளை விரைவில் தொடங்கவுள்ளன.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவலை தடுக்க தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கணிசமான ஊழியர்களைக் கொண்டு மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் சேவை சென்னையின் அடுத்த கட்ட போக்குவரத்து சேவையாக மாறியுள்ளது. எனவே, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டபணிகளை மேற்கொள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெறும். இதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன’’என்றனர்.