சென்னையில் இயக்கப்படும் நடமாடும் காய்கறி கடைகள் பல இடங்களுக்கு வருவதில்லை. இதனால் காய்கறிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாகனங்கள் மூலம் காய்கறி விற்கும் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில் 2,102 சிறிய வாகனங்கள் மூலம் கோயம்பேடு சந்தையில் இருந்து, மாநகராட்சி மண்டலங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் 5,345 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் கொண்டு சென்று விற்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தால் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. வீடுகளுக்கு அருகில் வாகனங்கள் வருவதால், குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் 3,790 டன் காய்கறிகள், 1,220 டன் பழங்கள், 31 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், சென்னையில் ஒருசில பகுதிகள், குறிப்பாக தென் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடமாடும் காய்கறி வாகனங்கள் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிலர் கூறியதாவது:
மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி விற்போரின் தொலைபேசி எண்கள் கொண்ட பட்டியல் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எண்களை யாரும் எடுப்பதில்லை. சில வியாபாரிகள், ஆள் சேர்த்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் காய்கறி வாங்குவதாக இருந்தால் அப்பகுதிக்கு வருவோம் என்கின்றனர். இதனால் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.
எனவே இதில் உள்ள சிக்கல்களை அரசு தீர்க்க வேண்டும். கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, வீடுகளுக்கே நேரடியாக காய்கறிகளை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், காய்கறி கடைகளை திறந்து, நடந்து சென்று மட்டுமே வாங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
இப்பிரச்சினை மாநகராட்சியின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, மாநகராட்சியின் தொலைபேசி உதவி மைய பணியாளர்கள் 20 பேர் மூலம், நடமாடும் வாகன வியாபாரியின் கைபேசி எண், அவர் விற்பனை செய்யும் இடம் ஆகியவை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2,500 பேரின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 2,500 பேரின் எண்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.வியாபாரிகளின் கைபேசிகளுக்கு அழைப்பு வந்தால், உடனே எடுத்து பேச அவர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் கைபேசியை எடுக்காவிட்டால், நடமாடும் காய்கறி சேவைக்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 94999 32899, 044 - 4568 0200 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்த மையத்தில் வியாபாரிகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்று இருப்பார்கள். அவர்கள் தொடர்புடைய வியாபாரியை தொடர்புகொண்டு, வாடிக்கையாளருக்கு உதவ நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.