திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வசதிக்காக, அரசு மருத்துவமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். 
தமிழகம்

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வசதிக்காக, அரசு மருத்துவமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 30 கிராம மக்கள், தங்களின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக திருப்போரூர் அரசுமருத்துவமனைக்கு வந்து செல்லும்நிலை உள்ளது. தற்போது, பேரூராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் இந்த மருத்துவமனையில் உரிய சிகிச்சை வசதிகள் இல்லை எனபொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும் நபர்கள் இந்த மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், பரிசோதனை மற்றும் தடுப்பூசிக்காக 8 கிமீ தொலைவில் உள்ள கேளம்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லுங்கள் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கேளம்பாக்கம் பகுதிக்குச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும், இம்மருத்துவமனையில் விரைவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாலாஜி தெரிவித்தார்.

இதில், அரசு மருத்துவர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் சதிஷ்குமார், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், திமுக நகர செயலாளர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT