நமது எம்ஜிஆர் இணையதளத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக் கப்பட்டுள்ளது.
அதிமுக நாளிதழான ‘நமது எம்ஜிஆர்’ இணையதள பக்கத்தில் 3 நாட்களுக்கு முன்பு, ‘2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்' என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்கப்பட, அதில் கருத்து தெரிவித்தவர்கள் அதிமுக கூட்டணிக்கு 13 சதவீத இடமும், திமுக கூட்டணிக்கு 85 சதவீத இடமும் கிடைக்கும் என்று கூறியிருந்தனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆசிரியர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், ‘‘நமது எம்ஜிஆர் இணையதளத்தை யாரோ முடக்கி, அதில் அவர்களுக்கு ஆதர வான கருத்தை வெளியிட்டுள்ளனர். எங்கள் இணையதளத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் உடனடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.