மக்களைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் பேச இது நேரம் அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர்களின் விமர்சனத்துக்கு அமைச்சர் பி.மூர்த்தி பதில் அளித்தார்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி, திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனையில் 50 படுக்கை கள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
திருமங்கலம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் கரோனா தடுப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் சென்றனர். கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் அமைச்சர் மூலம் மருத்துவமனைகளுக்கு வழங்கப் பட்டன.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு வாரத்துக்குள் படுக்கை வசதியுடன் மினி கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்படும். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை. மாவட்டத்தில் எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரத் துறை யினர் தொற்றைக் குறைக்க போராடி வருகின்றனர்.
சுகாதாரப் பணிகளில் சட்டப்பே ரவை தொகுதி வாரியாக பாரபட்சம் பார்ப்பதாகவும், அதிகாரிகள் மாற்றத்தால் பணிகள் தொய்வு அடைந்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேசுகின்றனர். மனிதாபிமானத்தோடும், மனசாட்சி யோடும் பேச வேண்டும்.
சில தவறான குற்றச்சாட்டுகளை காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில் பெயரளவில்தான் அம்மா கிளினிக்குகள் திறக்க ப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. நாங்கள் பணி செய்யாமல் இருப்பது போல குற்றம் சாட்டுகின்றனர். அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல. கரோனா பரவலை முழுமையாக ஒழித்தபின் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் சரியான விளக்கம் தரப்படும்.
இப்போது எதிர்க்கட்சியினர் நல்ல ஆலோசனையை மட்டும் வழங்கினால் போதும். கட்சி, தொகுதி என எவ்விதப் பாகுபாடும் இன்றி இரவு, பகலாக அதிகாரிகளுடன் இணைந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம், என்று கூறினார்.